கண் தான விழிப்புணர்வு பேரணி

கடலூரில் கண் தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-08-26 19:27 GMT

கடலூர், 

தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பார்வை இழப்பு தடுப்பு சங்க மாவட்ட திட்ட மேலாளர் கேசவன், அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் (பொறுப்பு) நடராஜன், தலைமை கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணி

இதில் அரசு ஆஸ்பத்திரியின் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டு பேரணியாக சென்று கண் தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக அரசு ஆஸ்பத்திரியை சென்றடைந்தது. இதில் அரசு ஆஸ்பத்திரியின் செவிலியர்கள் மற்றும் செவிலிய பயிற்சி பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்