கண்ணை பறிக்கும் 'டிஜிட்டல் போர்டுகள்'... உயிரை பறிக்கும் அபாயம்!
கோவை மாநகரில் கண்ணை பறிக்கும் டிஜிட்டல் போர்டுகளால் உயிர் பறிபோகும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்க்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோவை மாநகரில் கண்ணை பறிக்கும் டிஜிட்டல் போர்டுகளால் உயிர் பறிபோகும் அபாயம் நிலவுகிறது. இதை தவிர்க்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
டிஜிட்டல் போர்டுகள்
சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கு அங்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், அலங்கார தோரணங்கள் காரணம் என்பதால் அவை வைக்க தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதுபோன்று கண்ணை பறிக்கும் வகையில் டிஜிட்டல் போர்டு வைத்து விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் சில இடங்களில் தடையை மீறி இதுபோன்ற டிஜிட்டல் போர்டு வைப்பதால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் பளிச்சென்று கண் கூசும் வகையிலும், சில இடங்களில் கண்ணை மறைக்கும் வகையில் அதிக வெளிச்சத்துடன் வைக்கும் போர்டுகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. அத்துடன் வாகன ஓட்டிகளின் கவனமும் திசை திருப்பப்படுகிறது. விபத்து நடக்க இதுபோன்ற காரணங்களும் ஒன்றாக இருப்பதால்தான் டிஜிட்டல் போர்டு வைக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கோவை பகுதியில் பல இடங்களில் இந்த தடை மீறப்பட்டு வருவதால், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பறிபோகும் அபாயம் நிலவுகிறது.
விபத்து ஏற்படும் அபாயம்
அதுபோன்று மாநகராட்சி சார்பில் 20 இடங்களில் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் நேரம், கிழமை, தேதி, காற்றின் அளவு மற்றும் காலநிலை குறித்த தகவல் இடம் பெற்று வருகிறது. இந்த போர்டுகள் அனுமதி பெற்று வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மாநகர பகுதியில் அனுமதி இல்லாமல் வைக்கப்படும் விளம்பர பலகை, டிஜிட்டல் போர்டுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இருந்தபோதிலும் முழுவதுமாக அகற்றப்படாததால், பல இடங்களில் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை நிலவி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். அது தொடர்பாக கோவையை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
கவனத்தை திசை திருப்புகிறது
ராஜ்(சுந்தராபுரம்):-
விபத்துகள் நடப்பதை தடுக்கதான் சாலையோரத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதையும் மீறி தற்போது பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பல இடங்களில் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அதில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் பார்க்க பளிச்சென்று உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்பாகி விடுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதை தடுக்க வேண்டும்.
சிவக்குமார்(குனியமுத்தூர்):-
முதலில் டிஜிட்டல் போர்டுகளில் ரியான் என்ற வகையான போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. அதில் வெளிச்சம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு இருப்பதால் அந்த போர்டை பார்த்துவிட்டு சாலையை பார்க்கும்போது சில நொடிகளுக்கு முன்னால் செல்லும் எதுவுமே தெரியாது. அந்த அளவுக்கு கண்ணை அது பாதிக்கும். சென்னையில் இதுபோன்றுதான் விபத்து நடந்தது. எனவே கோவையிலும் விபத்துகள் நடக்காமல் இருக்க இதுபோன்ற பிளக்ஸ் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
கண்களை பாதிக்கிறது
பிரபு(காளப்பட்டி):-
கோவையின் முக்கிய சந்திப்புகளில் டிஜிட்டல் போர்டுகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. சில தனியார் கடைகள் முன்பும் சிறிய அளவில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. பகல் நேரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் இரவில் அது அதிகளவில் பாதிக்கிறது. மேலும் இதில் உள்ள ஒளி, வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்கவும் செய்கிறது. எனவே வாகன ஓட்டிகளை பாதிக்கும் இந்த டிஜிட்டல் போர்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தேவேந்திரன்(துடியலூர்):-
கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் ஸ்கிரீன் சைன் என்ற போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. அதில் செய்யப்படும் விளம்பரத்தின் தாக்கம் சாலைகளில் வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விபத்துகள் நடக்கும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. சில போர்டுகள் அனுமதி பெற்று வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி பெற்று இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து முக்கிய இடங்களில் உள்ள சைன் போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும்.