தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

Update: 2022-09-22 15:57 GMT


திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தென்மாவட்ட தொழிலாளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது ெசாந்த ஊருக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்றால் திருப்பூரில் இருந்து போதிய பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

இதனால் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் விசேஷ நாட்களில் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அவர்களால் ஊர்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே திருப்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கூடுதல் பஸ்கள்

கொரோனா காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமப்புறம் மற்றும் புறநகர பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இயல்புநிலை திரும்பிய பிறகும் இதில் பல பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளன. இதன்காரணமாக கிராமப்புற, நகர்ப்புற மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், நோயாளிகள், அன்றாட வேலைக்கு பஸ் பயணத்தை நம்பி இருக்கக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தட பஸ்களையும் உடனடியாக முழுமையாக இயக்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர்-கோவை பஸ்களை பல்லடம், அவினாசி என இரு வழித்தடங்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை முழுமையாக இயக்க வேண்டும். கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாமல் ஒவ்வொரு நாளும், குறிப்பாக சனிக்கிழமை, முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள், பெண்கள், முதியோர் இரவில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்களை பயணிகள் தேவைக்கு ஏற்ப இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்