வெளிநாட்டு வாலிபரை ஆட்டோவில் அழைத்து சென்று பணம் பறிப்பு

வேலூரில் சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு வாலிபரை தங்கும் விடுதியில் அறை எடுத்து தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்து சென்று பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-06 12:57 GMT

வேலூரில் சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு வாலிபரை தங்கும் விடுதியில் அறை எடுத்து தருவதாக கூறி ஆட்டோவில் அழைத்து சென்று பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டு வாலிபர்

வங்காளதேசத்தை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 24). இவர் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைக்கு பின்னர் அவர் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதனால் முகமது ரசூல் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுக்க முடிவு செய்தார். அதற்காக அவர் மருத்துவமனையின் முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.

ரூ.5 ஆயிரம் பறிப்பு

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர், அவரிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முகமது ரசூல் அருகே உள்ள தங்கும் விடுதியில் அறை எடுக்க உள்ளேன் என்று கூறி உள்ளார். அதற்கு ஆட்டோவின் பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர்கள் குறைந்த விலையில் விடுதியில் தங்க இடவசதி உள்ளது. எங்களுடன் ஆட்டோவில் வாருங்கள் என்று கூறி உள்ளனர். அதனை நம்பி அவர் ஆட்டோவில் ஏறி சென்றார்.

ஆட்டோ காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே உள்ள தெருவில் திடீரென நுழைந்தது. அங்கு வைத்து ஆட்டோவில் இருந்த மர்மநபர்கள் முகமது ரசூலை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

இதில், காயமடைந்த முகமது ரசூல் எங்கு செல்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். பின்னர் இதுகுறித்து முகமது ரசூல் வேலூர் வடக்கு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூருக்கு சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு வாலிபரை ஆட்டோவில் அழைத்து சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு வரும் பிறமாநிலத்தவர்கள், வெளி நாட்டவரிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்