ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி நகை, பணம் பறிப்பு

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளரை அரிவாளால் வெட்டி நகை, பணம் பறிக்கப்பட்டது.

Update: 2022-10-30 12:51 GMT

ஆடை தயாரிப்பு நிறுவனம்

கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும்

தனியார் நிறுவனம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இங்கு பல்வேறு விதமான ஆடைகள் தயாரிக்கப் பட்டு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு. உள்ளூரில் மொத்த விலை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

சில ஆண்டுகளாக நிறுவன வளாகத்திலேயே சிறிய அளவில் கடை அமைத்து குறைந்த விலையில் ஆடைகள் உள்ளூர் பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வண்டலூர் அடுத்த ஊனமஞ்சேரி பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 30) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ந்தேதி இரவு 8 மணி அளவில் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

நகை- பணம் பறிப்பு

அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி ஆட்டோவில் வந்த 5 வாலிபர்களில் 4 பேர் கடைக்கு வந்து ஆடை விலை குறித்து கேட்டுக்கொண்டிருந்தனர். பின்னர் ஒருவர் மட்டும் கடைக்கு வெளியே சென்றுவிட்டார்.

கடைக்குள் இருந்த அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துரு தலை மீது வெட்டினர்.

பின்னர் அவரை மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 5 ஆயிரம் லாக்கரில் இருந்த ரூ. 10 ஆயிரம், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, கையில் அணிந்திருந்த மோதிரம் உள்பட 3 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஆயத்த ஆடைகள் மற்றும் சந்துருவின் செல்போனை பறித்து, அதில் கூகுள்பே மூலம் சந்துருவிடம், பின் நம்பரை கேட்டு, ரூ. 10 ஆயிரத்தை அனுப்பி விட்டு செல்போனையும் பறித்து கொண்டு மிரட்டி விட்டு சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் இருந்த சந்துருவை மீட்டு கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்