சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு-பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-01-28 22:56 GMT

மூதாட்டி

சேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 90). மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் மூதாட்டியின் வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார்.

அவர், மூதாட்டி லட்சுமியிடம் நைசாக பேசி, தங்கள் கியாஸ் சிலிண்டர் அட்டையை காண்பித்தால், அதை பார்த்துவிட்டு பரிசு தருகிறோம் என்று கூறி உள்ளார். இதை நம்பிய மூதாட்டி அட்டையை எடுக்க வீட்டிற்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்து அந்த பெண்ணும் பேச்சு கொடுத்தவாறு வீட்டிற்குள் சென்று உள்ளார்.

நகை, பணம் பறிப்பு

பின்னர் திடீரென்று அந்த பெண், மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை பறித்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து லட்சுமி அம்மாபேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை மிரட்டி நகை, பணம் பறித்து சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்