பணம் பறிப்பு- ரவுடி உள்பட 9 பேர் கைது
பணம் பறிப்பு சம்பவத்தில் ரவுடி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் முகம்மது அப்துல்லா (வயது 19). இவர் டீக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து பணத்துடன் வீட்டிற்கு கரும்பாலை கம்யூனிட்டி சென்டர் வழியாக நடந்து சென்றார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. மேலும் அவரை தாக்கி அவரிடமிருந்த 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பியது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த பிரபல ரவுடி அருண்பாண்டி, வினோத்குமார், பாலசக்தி (19), தமிழ்இனியன், ராமசந்திரன், ஹரிவிக்னேஷ் (22), கார்த்தி (19), சோனைமுத்து (25), சித்திரைவேல் (28) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.