வேப்பலோடை,நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

வேப்பலோடை,நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-09-26 18:45 GMT

வேப்பலோடை, நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) வரை நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேப்பலோடை மற்றும் நாகலாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023-ம் ஆண்டுக்கான சேர்க்கையானது 23.9.2023 வரை நடந்தது. தற்போது காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு வருகிற 30-ந் தேதி(சனிக்கிழமை) வரை நேரடி மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி வேப்பலோடை தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 14 இடங்கள், உற்பத்தி செயல் முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவில் 7 இடங்கள், அட்வான்ஸ்டு சிஎன்ஜி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 3 இடங்கள் என மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளன. நாகலாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழில்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் பிரிவில் 5 இடங்கள், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன் பிரிவில் 10 இடங்கள் ஆக மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்கலாம்

இதில் சேர விரும்புவோர்; பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், பாஸ்போட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, பாடப புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்கு தேவையான நுகர் பொருட்கள், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்