மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

நெல்லை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-01 21:48 GMT

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகள மற்றும் பல்கலைக்கழகத்துறை மாணவர்களுக்கு நவம்பர் 2022-க்கான தேர்வுகள், டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான தேர்வு கட்டணத்தை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் இணைய வழியில் செலுத்த அபராத கட்டணமின்றி வருகிற 5-ந் தேதி வரையும், அபராத கட்டணத்துடன் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும் செலுத்தி பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதலாமாண்டு மாணவர்கள் தேர்வு கட்டணத்தை அபராதமின்றி 9-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும், அபராத கட்டணத்துடன் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையும் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 2022-க்கான எழுத்து தேர்வுகள் அனைத்தும் அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அந்தந்த கல்லூரிகளில் வழக்கமான நடைமுறையில் நடைபெறும்.

மேலும், 2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் இளநிலை 2017-ம் ஆண்டு, முதுநிலை 2018-ம் ஆண்டு, முதுநிலை கணினி பயன்பாடுகள் 2017-ம் ஆண்டு மற்றும் ஆய்வு நிறைஞர் 2019-ம் ஆண்டு பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து நிறைவு செய்ய முடியாத தனித் தேர்வர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதால் சம்பந்தப்பட்ட தனித் தேர்வர்கள் வரையறுக்கப்பட்டுள்ள கால கெடுவிற்குள் இணைய வழியில் தேர்வுக்கட்டணம் செலுத்தி நவம்பர்-2022 தேர்விற்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பலகலைக்கழக இணையதளம் (msuniv.ac.in) வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்