சிவகாசி அருகே வெடி விபத்து: மின்னல் தாக்கி பட்டாசு அறைகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டு, 2 அறைகள் வெடித்துச்சிதறி தரைமட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-22 18:53 GMT

சிவகாசி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி் வெடி விபத்து ஏற்பட்டு, 2 அறைகள் வெடித்துச்சிதறி தரைமட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்தவர் மாடசாமி (வயது 52). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை எம்.புதுப்பட்டி சாணார்பட்டி பகுதியில் இயங்கி வந்தது.

நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. நேற்று பட்டாசு உற்பத்தி நடைபெற்றது.

மின்னல் தாக்கியது

பிற்பகல் 3 மணி அளவில் பட்டாசு ஆலை அமைந்துள்ள பகுதியில் பலத்த இடி-மின்னல் ஏற்பட்டது. லேசான மழையும் பெய்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் ஆலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர்.

சற்று நேரத்தில் மீண்டும் பலத்த மின்னல் வெட்டியபோது, ஆலையில் உள்ள 15, 16-வது அறைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி தரைமட்டமாகி கிடந்தன. அந்த அறையில் பேன்சிரக பட்டாசுகளை தயாரித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணம் இருந்தன. அவ்வாறு வெடித்து தெறித்த பட்டாசுகள் அருகில் இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட அறைகளில் விழுந்தன. இதனால் அந்த அறைகளில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.

விசாரணை

இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் ஸ்ரீதர், திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரித்து வருகி்ன்றனர். இச்சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மின்னல் ஏற்பட்ட உடனேயே தொழிலாளர்கள் ஆலையில் இருந்து வெளியேறியதால் இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்