கோவில் விழாவில் வெடி விபத்து; சிறுவன் சாவு
கோவில் விழாவில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் உயிரிழந்தான்.
வேப்பந்தட்டை:
பள்ளி மாணவன்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சுகன்யா. விவசாயிகள். இவர்களுக்கு லலித்கிஷோர்(வயது 9) என்ற மகனும், லியானா என்ற மகளும் உண்டு.
இதில் லலித்கிஷோர் அரசலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பள்ளியில் லியானா 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
வெடித்து சிதறியது
இந்நிலையில் அரசலூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது வாணவெடி மற்றும் அதிர்வேட்டுகள் வெடிக்கப்பட்டது. இதில் வெடிகளில் ஒன்று சிதறி அங்கு கூடியிருந்த கூட்டத்திற்குள் புகுந்து வெடித்து சிதறியது. இதில் லலித்கிஷோருக்கு(வயது 9) தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த புனிதா(32), திருச்சி மாவட்டம், சிக்கத்தம்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(36), ஷோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த பிரியா(21) ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாவு
இதில் சுரேஷ், பிரியா, புனிதா ஆகியோருக்கு அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ேமலும் லலித்கிஷோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், லலித்கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையறிந்து அவனது உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமம் இல்லாமல் வெடி வெடித்த அதே ஊரைச் சேர்ந்த நீலகண்டன்(27), மணிகண்டன்(34) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் கும்பாபிஷேக விழாவின்போது வெடிக்கப்பட்ட வெடி சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.