புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுப்பு; பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

நெல்லை அருகே புதைக்கப்பட்ட மூதாட்டி உடல் தோண்டி எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-01 20:22 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லியைச் சேர்ந்தவர் பூமணி (வயது 80). இவர் வயது முதிர்வின் காரணமாக இறந்தார். அவரது உடலை அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரை மயானம் பகுதியில் நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் பூமணியின் உடலை அடக்கம் செய்த இடமானது பொதுப்பாதை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் தாசில்தார் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் பூமணியின் உடலை தோண்டி எடுத்து, மயானத்தில் மாற்று இடத்தில் புதைத்தனர்.

நேற்று காலையில் இதனை அறிந்த பூமணியின் உறவினர்கள், பொதுமக்கள் மயானத்தில் திரண்டனர். அவர்கள், பூமணியின் உடலை மாற்று இடத்தில் புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சுத்தமல்லி போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மயானத்தை வருவாய் துறையினர் அளவீடு செய்து எல்லை கற்களை நட்டினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்