கடலூர் அருகே கொன்று புதைக்கப்பட்டதனியார் நிறுவன ஊழியர் உடல் தோண்டி எடுப்புமதுகுடிக்க அழைத்துச் சென்று தீர்த்து கட்டிய வாலிபர் கைது

கடலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரை மதுகுடிக்க அழைத்துச் சென்று தீர்த்து கட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-07 18:45 GMT

தனியார் நிறுவன ஊழியர்

கடலூர் அருகே ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன் (வயது 25). இவர், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2-ந்தேதி இரவு வேலை முடிந்து நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் புதுக்கடையில் வந்திறங்கினார். அதன்பிறகு அன்பரசனை காணவில்லை.

இது குறித்து அவரது தந்தை ரமேஷ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான அன்பரசனை தேடி வந்தனர். மேலும் புதுக்கடை பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொன்று புதைப்பு

அதில் சிலர், அன்பரசனின் தோளில் கை போட்டு அழைத்துச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இது தொடர்பாக புதுக்கடையை சேர்ந்த சந்தோஷ் (20) என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து அன்பரசனை அடித்துக்கொலை செய்து சிங்கிரிகுடி சுடுகாடு அருகே உள்ள சவுக்கு தோப்பில் புதைத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர், அன்பரசனை புதைத்த இடத்தையும் போலீசாரிடம் அடையாளம் காட்டினார். இதையடுத்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அன்பரசன் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

உடல் தோண்டி எடுப்பு

அதன்படி துணைஆட்சியர் (பயிற்சி) அபிநயா, கடலூர் தாசில்தார் விஜய் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் அன்பரசன் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மற்றும் ரெட்டிச்சாவடி போலீசார் உடனிருந்தனர்.

தொடர்ந்து புதுச்சேரி மருத்துவக்குழுவினர் அன்பரசன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு அங்கேயே அவரது உடல் புதைக்கப்பட்டது.

கொலை செய்தது ஏன்?

சந்தோஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அய்யனார், ஜோசப் ஆகிய 2 பேரும் நண்பர்களாக இருந்து, பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அய்யனாரிடம் இருந்த அன்பரசன் ஜோசப்பிடமும் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அய்யனார் எங்கெல்லாமல் செல்வார்?, என்னென்ன செய்வார்? என்ற தகவலை அவ்வப்போது ஜோசப்பிடம் அன்பரசன் கூறி வந்ததாக தெரிகிறது.இதை அறிந்த அய்யனார், அன்பரசன் தன்னை கொலை செய்ய திட்டமிடுவதாக நினைத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்கிடையே ஜோசப் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையை பயன் படுத்திய அய்யனார் தரப்பை சேர்ந்த சந்தோஷ் உள்பட 5 பேர் சேர்ந்து அன்பரசனை சம்பவத்தன்று மது குடிக்க அழைத்தனர். பிறகு புதுக்கடையில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தினர். அப்போது அன்பரசனுக்கு போதை அதிகமானதும், அவரை கட்டையால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை சிங்கிரிகுடி சுடுகாடு அருகே உள்ள சவுக்குத் தோப்புக்கு கொண்டு சென்று புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து ரெட்டிச்சாவடி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்தோசை கைது செய்தனர்.

4 பேருக்கு வலைவீச்சு

தொடர்ந்து மற்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்ட பிறகே இந்த கொலைக்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்