சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் 20 ஆயிரம் விதவிதமான கண்கவரும் விநாயகர் சிலைகளுடன் உருவான கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-20 00:24 GMT

தாம்பரம்,

குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணரான சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் அப்பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெரு, ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் 17-ந்தேதி விநாயகர் சிலை கண்காட்சி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற்றுவருகிறது.

காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்கள் கண்காட்சியை பார்க்க இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் விநாயகர் சிலைகள்

கண்காட்சியை தமிழக சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். அப்போது, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் உடன் வந்தனர்.

இந்த ஆண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள 'சந்திரயான் பிள்ளையார்' பொதுமக்களிடயே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், 7 அடி உயரத்தில் அத்தி மரத்தில் செய்யப்பட்டஅத்திவரதர் விநாயகர் சிலை, ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட திண்டு விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், சயன திருக்கோலத்தில் அமைந்துள்ள விநாயகர் உள்பட 20 ஆயிரம் விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ புகைப்படங்கள், வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள் படங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

பொதுமக்கள் மகிழ்ச்சி

ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான விநாயகர்களை பார்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியை பார்வையிட தாம்பரம் எம்.எல்.ஏ.எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.பி.யும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்