பெரும்பாலை அருகே செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை உறவினர்கள் சாலை மறியல்

பெரும்பாலை அருகே செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-29 16:22 GMT

ஏரியூர்:

பெரும்பாலை அருகே செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

செங்கல் சூளை உரிமையாளர்

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை அருகே சின்னம்பள்ளி கோவள்ளி கோம்பை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 53). செங்கல் சூளை உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் (30). விவசாயி. உறவினர்களான இவர்களுக்கு இடையே பொது வழித்தடம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை கந்தசாமி பால் ஊற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். கோவள்ளி கோம்பை அருகே சென்றபோது குபேந்திரன், கந்தசாமியை வழிமறித்து உள்ளார். பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தசாமியின் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

இதில் கந்தசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து வந்தனர். இதனால் குபேந்திரன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார்.

சாலை மறியல்

இதனிடையே கந்தசாமியின் உறவினர்கள் கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி பென்னாகரம்-மேச்சேரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தர்ராஜன், ஏரியூர் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நிலையத்தில் சரண்

இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குபேந்திரன் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்