ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்

ஆட்டங்காட்டும் ‘ஆன்லைன்' சூதாட்டம் குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-28 18:43 GMT

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் 'ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் 'ஆன்லைன்' விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.

'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை வசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.

இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.

சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.

தடையைத் தகர்த்தனர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடையை தகர்த்துவிட்டன.

கொரோனா காலகட்டத்தில் இந்த விளையாட்டுகள் கொடிக்கட்டிப் பறந்தன. வேலையிழப்பு அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பதிவிறக்கம் அசுர வேகத்தில் நடைபெற்றன.

அதே வேகத்தில் சூதாடிப் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் விளைவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது.

நிரந்தர தடை சட்டம் எப்போது?

அந்த குரலுக்கு செவி சாய்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை அவசியம் என்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.

அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரம் ஆக்குவதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடியும்.

ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னமும் கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

கவர்னர் விரைவில் முடிவு

கவர்னர் தரப்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 3 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறையும் உடனடியாக அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்களை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு கவர்னர் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றி சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதாட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வக்கீல்கள் கருத்து

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன்:-

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தமட்டில் வயது வரம்பில்லாமல் ஆண், பெண், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்த விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இது லாட்டரி சீட்டுகளைவிட பல மடங்கு கொடுமையானது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் முடிவெடுப்பதில் கவர்னர் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கவர்னர் தாமதம் செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் என்பது பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய விவகாரம் என்பதால் கவர்னர் விரைந்து முடிவு எடுப்பது தான் மக்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.

வக்கீல் அரிகரன்:-

ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த ஆட்சியில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தற்காலிகத் தடை அமலில் இருந்தது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தி வரும் நிறுவனங்கள் இந்த தடை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று வாதாடி தடையில் இருந்து தப்பித்தது. முந்தைய கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்தும் பயன் இல்லாமல் போனது.

எனவே இந்த முறை தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால்கூட தீர்ப்பு அரசுக்கு சாதகமாக வரவேண்டும் என்பதில் தமிழக கவர்னர் கவனம் செலுத்துகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. எனவே அந்த அடிப்படையில்தான் அவர் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். இதை நாம் தடங்கலாக கருதக்கூடாது. இதனை நிரந்தர தீர்வுக்கான ஒரு காலதாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிரந்தர தடைவிதிக்க வேண்டும்

வேலூரை சேர்ந்த ஏழுமலை:

இக்காலக்கட்டத்தில் சூதாட்டத்தில் யார், யார் விளையாடுகிறார்கள் என்பது தெரியவில்லை. குறிப்பாக குழந்தைகள், வாலிபர்கள் அதிகமாக விளையாடி சிக்கிக்கொள்கிறார்கள். அதற்கு அடிமையாகும் சூழல் உள்ளது. தந்தையின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் கட்டி பலர் பணத்தை இழந்துள்ளனர். தற்கொலைக்கும் பலர் முயன்றுள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும். இதை நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ரகுநாத்:- ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்து கடனாளி ஆன சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களால் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் எவ்வளவு தற்கொலைகள் நிகழும் என்று நினைத்தாலே பயம் அடைய செய்கிறது. ஊருக்கு வெளிப் புறமாக சீட்டு விளையாடுபவர்களை தேடிக் கண்டுபிடித்த நிலை மாறி தற்போது எல்லா வீடுகளிலும் ஆன்லைன் மூலமாக சீட்டு விளையாடும் நிலை உள்ளது. மக்களின் உயிரை குடிக்கும் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் நிரந்தர தடைவிதிக்க வேண்டும்.

தற்கொலை சம்பவங்கள்

ஆற்காடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபி:- ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் பணத்தை இழந்து, சொத்துக்களை விற்று மேற்கொண்டு கடன்களை பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு, கடன்களை திரும்ப கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். மன நிம்மதியை இழந்து பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே இந்த ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்தால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைவார்கள்.

குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.மோகன்:- ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தங்களை அறியாமல் சிக்கிக் கொண்டு பணத்தை இழக்கிறார்கள். இதற்காக கடன் வாங்கி திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்காக சிலர் அலுவலகத்தில் பணத்தை கையாடல் செய்து சிறைசென்ற சம்பவங்களும் உண்டு. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு. தற்போது பெண்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை உள்ளது. தற்போது படிப்பறிவு இல்லாத கூலித் தொழிலாளர்கள் கையிலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் உள்ளதால் கூலி தொழிலாளர்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யவேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆன்லைன் சூதாட்டத்தால் இனி உயிரிழப்பு என்ற நிலையை தவிர்க்க வேண்டும்.

நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வாணியம்பாடியை சேர்ந்த தமிழினியன்:- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இந்த சூதாட்டத்தால் சாதாரண மக்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மிகவும் பாதிப்பு அடைகின்றனர். இதனை முற்றிலுமாக தடுத்திட தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தற்போதும் லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்கப்படுகிறது. இதனையும் முழுமையாக தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை அருகில் உள்ள நார்த்தாம்பூண்டியை சேர்ந்த சரவணன்:- ஆன்லைன் சூதாட்டம் இன்று மக்களை பெரிதும் பாதிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. முதலில் ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். பின்னர் அதற்கான செயலியை தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் லாட்டரி கலாசாரம் குறைந்திருந்தாலும், தற்போது ஆன்லைன் மூலம் சீட்டு விளையாடுவது இளைஞர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. எனவே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை முழுவதுமாக ஒழிப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும். இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணத்தை இழந்து வருகின்றனர். இதற்காக வீட்டில் பொய் சொல்லி பணத்தை பெறுகின்றனர். வீட்டில் தாய், தந்தை இல்லாத பொழுது சேமிப்பு பணத்தை இளைஞர்கள் திருடுகின்றனர். வாழ வேண்டிய வயதில் தற்கொலைக்கு முயல்கின்றனர். எதிர்காலத்தில் நாட்டைக் காக்கும் இளைஞர்கள் வாழ்க்கை பாழடைந்து வருகிறது. எனவே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை முழுவதுமாக ஒழிப்பதற்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

சுய கட்டுப்பாடு வேண்டும்

செய்யாறு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ஷகிலா அருள்ராஜ்:-

படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடு இன்றி பேராசையினால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பொது மக்களை திசை திருப்பும் நோக்கில் அதிக அளவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு சட்டமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். ஆசையை தூண்டி அடிமைப்படுத்திடும் ஆன்லைன் சூதாட்டத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தவிர்க்க வேண்டும்.

திருப்பத்தூரை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் ஆர்.வெங்கடேசன்:-

ஆன்லைன் சூதாட்டத்தில் ரம்மி போன்ற பல்வேறு விளையாட்டுகளால் முதலில் நமக்கு பணத்தை போட்டு ஆசை காட்டுவார்கள். பிறகு விளையாடத் தொடங்கியதும் சிறிது வருவாய் நமக்கு வரும். இது மிக நன்றாக உள்ளது என எந்த வேலைக்கும் செல்லாமல் பணம் வருகிறது என நினைத்து உடனடியாக நாம் விளையாடினால் சிறிது சிறிதாக பணத்தை இழப்போம். மீண்டும் விட்ட பணத்தை எடுக்கலாம் என கூறி கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்தும் விளையாடத் தூண்டும். பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் அனைத்தையும் இழந்த பிறகு தற்கொலைக்கு ஆளாகிறார்கள். ஆகையால் ஆன்லைனில் எவ்வாறு ஆசை காட்டினாலும் அதற்கு நாம் செவி சாய்க்காமல் இது போன்ற அபாயகரமான விளையாட்டை தவிர்க்க வேண்டும். இதற்கு சுய கட்டுப்பாடு முக்கியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பவர்கள், அரசாங்கம் தடை போட்டாலும், விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதையும் காண முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்