ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்

ஆட்டங்காட்டும் ‘ஆன்லைன்' சூதாட்டம் குறித்து வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-28 16:22 GMT

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் 'ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் 'ஆன்லைன்' விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.

'ரம்மி' போன்ற சூதாட்டம்

'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை மசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.

இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.

சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.

தடையைத் தகர்த்தனர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடையை தகர்த்துவிட்டன.

கொரோனா காலகட்டத்தில் இந்த விளையாட்டுகள் கொடிக்கட்டிப் பறந்தன. வேலையிழப்பு அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பதிவிறக்கம் அசுர வேகத்தில் நடைபெற்றன.

அதே வேகத்தில் சூதாடிப் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் விளைவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது.

நிரந்தர தடை சட்டம் எப்போது?

அந்த குரலுக்கு செவி சாய்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை அவசியம் என்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.

அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரம் ஆக்குவதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடியும்.

ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னமும் கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

கவர்னர் விரைவில் முடிவு

கவர்னர் தரப்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 3 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறையும் உடனடியாக அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்களை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு கவர்னர் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வடமாநில பெண் தற்கொலை

இதற்கிடையே தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீதனா மாஞ்சி நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம் பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வக்கீல் மணிகண்டன் (சிலுக்குவார்பட்டி) :- ஆன்லைன் சூதாட்டத்தால் பொருளாதாரத்தை இழந்து சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். சமூகத்தில் குற்றங்களும் அதிகரித்து விட்டன. இதுபோன்ற நிலை ஏற்படாமல் வருங்கால சமூதாயத்தை காக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதேநேரம் சூதாட்டத்தை தடை செய்யும் நிரந்தர சட்டம் மிகவும் தேவையான ஒன்று. இது தொடர்பான மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, அரசு விளக்கமும் அளித்து இருக்கிறது. எனவே தமிழகத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நிரந்தர தடை சட்டம் கொண்டு வரவேண்டும். அதற்கு கவர்னர் விரைவாக ஒப்புதல்அளிக்க வேண்டும்.

குடும்ப பொருளாதாரம்

குடும்ப தலைவி சிவகாமி (நத்தம்):- இளைஞர்கள் மட்டுமின்றி சில இளம்பெண்களும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பெற்றோருக்கு தெரியாமல் நிறைய பணத்தை இழந்த பின்னர், விரக்தியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். சூதாட்டம் என்றாலே, குடும்ப பொருளாதாரத்தை பாழாக்குவது தான். அத்தகைய சூதாட்டம் எந்த வடிவில் இருந்தாலும் தடை செய்ய வேண்டியது அவசியம். ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்வது முக்கியமானது. அதன்மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுப்பதோடு, பல குடும்பங்களை காப்பதாகவும் இருக்கும். எனவே நிரந்தர தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

சிறந்த சமுதாயத்தை உருவாக்க...

கல்வியாளர் இளங்கோ (நிலக்கோட்டை) :- ஆன்லைன் சூதாட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபடுகின்றனர். இதனால் பணத்தை இழப்பதோடு, மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதன்மூலம் குற்ற செயல்களும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். இதற்கு தடை சட்டம் மிகவும் அவசியமானது.

குடும்ப தலைவி வனிதா (கோபால்பட்டி) :- ஆன்லைன் சூதாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் மாணவர்கள், சூதாட்டத்தில் பணத்தையும், நேரத்தையும் இழக்கின்றனர். மேலும் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும்.

மாணவர்கள் பாதிப்பு

விவசாயி ரகுநாத் (கணவாய்பட்டி) :- இளைஞர்கள் பொழுதுபோக்குக்காக ஆன்லைன் சூதாட்டத்தில் நுழைகின்றனர். நாளைடைவில் அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து, மனஉளைச்சலுக்கு உள்ளாகி விடுகின்றனர். இதனால் வேறு தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்கான அவசர சட்டம் காலாவதியாகி இருப்பது பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வரவேண்டும். அதேபோல் ஆபாச இணையதளங்களால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். அவற்றை தடைசெய்யவும் சட்டம் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பவர்கள், அரசாங்கம் தடை போட்டாலும், விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதையும் காண முடிகிறது.

---

Tags:    

மேலும் செய்திகள்