பெரம்பலூர் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
வெயிலை சமாளிக்க பெரம்பலூர் நீச்சல் குளத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக குளியல் போட்டனர்.
கத்திரி வெயில் முடிந்தது
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. தற்போது அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் நேற்று முன்தினம் முடிந்தாலும், வெயில் வாட்டி வதைப்பது குறையவில்லை. அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கருப்பு கண்ணாடிகளை அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் ஜூஸ், கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கம்மங்கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
உற்சாக குளியல்
நேற்று வெயிலின் தாக்கம் பெரம்பலூரில் அதிகமாக காணப்பட்டதால் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு கூட்டம் அலைமோதியது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், வெயிலை சமாளிப்பதற்காக நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்த வண்ணம் இருந்ததை காணமுடிந்தது. இதில் நிறைய பேர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் குளியலை போட்டு வெயிலின் கொடுமையை சமாளித்தனர். மேலும் அந்த நீச்சல் குளத்தில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், காலை 8 மணி முதல் 9 மணி வரையும் நீச்சலும் கற்று கொடுக்கப்படுகிறது. நீச்சல் கற்றுக்கொள்ளவும், குளிக்கவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறிப்பிட்ட கட்டணம் ஜி.எஸ்.டி.யுடன் வசூலிக்கப்படுகிறது. நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை விடப்படுகிறது.