பெரியகுளத்தில் பரபரப்பு:போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயற்சி :சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பெரியகுளத்தில் போலீஸ்காரர்களை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2023-07-03 18:45 GMT

பெண்ணுக்கு கொலைமிரட்டல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மனைவி ஹேமலதா (வயது 29). இவரது தாயார் விஜயா. இவரது வீடு, பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் ஹேமலதா தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (22), மாசாணம் (22) ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் முன்விரோதம் காரணமாக விஜயா வீட்டின் கதவை தட்டி உடைத்தனர். பின்னர் அங்கு இருந்த ஹேமலதாவை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த விஜயா இருவரையும் தட்டிக் கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த காமராஜ், மாசாணம் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அரிவாளால் வெட்ட முயற்சி

இதையடுத்து ஹேமலதா அவசர போலீஸ் 100-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ்காரர்கள் செந்தமிழ் செல்வன், தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது காமராஜ், அவரது நண்பரான தீபக் ரவீந்திரன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் போலீசாரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீஸ்காரர்களுடன் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசினர்.

இதனை போலீஸ்காரர் செந்தமிழ்செல்வன் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதைக்கண்டதும் காமராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீஸ்காரர்களை வெட்டிக்கொல்ல முயன்றார்.

வீடியோ வைரல்

இதுகுறித்து போலீஸ்காரர்கள், தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனுசுயாவிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரில், சீருடையில் இருந்த தங்களை மிரட்டி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு தீபக் ரவீந்திரனை கைது செய்தனர். தப்பியோடிய மாசாணம், காமராஜ் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்