ஈரோட்டில் பரபரப்புஸ்கூட்டரில் சென்று நடுரோட்டில் குளித்த வாலிபர்
ஈரோட்டில் ஸ்கூட்டரில் சென்று நடுரோட்டில் குளித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதிக்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றார். அவர் திடீரென ஸ்கூட்டரில் உள்ள ஒரு பக்கெட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து தனக்குத்தானே உடலில் ஊற்றி குளிக்க தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்களின் அனைவரது கவனமும் அந்த வாலிபரை நோக்கி சென்றது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டே ஸ்கூட்டரை ஓட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதை போல் இந்த வாலிபரும் தண்ணீரை உடலில் ஊற்றிக் கொள்வதாக அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்கள் விசாரித்தபோது அந்த நபர் வெள்ளோட்டை சேர்ந்த பாரூ (வயது 26) என்பதும், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விடுத்த ஒரு சவாலை ஏற்று அந்த வாலிபர் நடுரோட்டில் குளித்ததும் தெரியவந்தது. அவர் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்த போது அருகில் இருந்தவர்கள் மீதும் பட்டதால், அவர்கள் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாரூ அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான பன்னீர்செல்வம் பூங்காவில் வாலிபர் ஒருவர் திடீரென நடுரோட்டில் குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.