தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு
மணிகண்டம் அருகே தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 28). இவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் குடியிருக்கும் வீட்டில் பேய் நடமாட்டம் இருக்கிறது. அதனால் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்கு செல்வோம் என்று ஐஸ்வர்யா தனது கணவரிடம் அடிக்கடி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருதுபாண்டி அதே பகுதியில் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தனது மனைவியுடன் குடியிருந்து வந்தார். அந்த வீட்டிலும் பேய் நடமாட்டம் உள்ளது என்றும் தனக்கு பயமாக உள்ளதால் வேறு ஒரு வீட்டிற்கு செல்லலாம் என்று தனது கணவரிடம் ஐஸ்வர்யா தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மருதுபாண்டி நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். மதியம் 2 மணியளவில் அக்கம்பக்கத்தினர் மருதுபாண்டி வீட்டிற்கு வந்து ஐஸ்வர்யாவை கூப்பிட்டு உள்ளனர். அவரை காணாததால் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது உள் அறை உள்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மருதுபாண்டி வீட்டிற்கு வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது வீட்டின் உள் அறையில் உள்ள மின்விசிறியில் ஐஸ்வர்யா சேலையால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை மருதுபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அவசரஅவசரமாக சுடுகாட்டில் எரியூட்டுவதற்கு எடுத்து செல்ல புறப்பட்டனர். அப்போது அங்கு வந்த ஐஸ்வர்யாவின் பெற்றோர் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த மணிகண்டம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் உள்ளிட்ட போலீசார் ஐஸ்வர்யா இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யாவின் தாய் லட்சுமி தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று ஆலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.