வீடுகளில் பில்லி சூனியம் வைக்கும் கும்பல்: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

Update: 2023-06-24 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் சந்துக்கடைகளில் மது விற்பனை செய்வது குறித்து போலீசில் புகார் தெரிவிப்பவா்களின் வீடுகளில் மர்ம கும்பல் பில்லி சூனியம் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சந்துக்கடையில் மது விற்பனை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே பையர்நத்தம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த மதுபிரியர்கள் தினமும் வந்து மது வாங்கி குடித்து செல்கின்றனர். பார் வசதி இல்லாத நிலையில் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், சிக்கன் கடைகள், ரோட்டோரம் அமர்ந்து அவர்கள் மது குடித்து செல்கின்றனர். இரவு 10 மணி முதல் மறுநாள் நண்பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடை இயங்குவதில்லை. இதனை பயன்படுத்தி கொண்டு சிலர் சந்துக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால், 24 மணி நேரமும் இப்பகுதியில் மது விற்பனை நடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

பில்லி சூனியம்

இந்த நிலையில் புகார் செய்தவரின் பெயர் போலீசார் மூலம் சந்துக்கடை காரர்களுக்கு தெரிய வருவதாக கூறப்படுகிறது. இதனால் சந்துக்கடைகளில் மது விற்பனை செய்வது குறித்து போலீசில் புகார் தெரிவிப்பவர்களின் வீடுகளில் மர்ம கும்பல் பில்லி சூனியம் வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது, பையர்நத்தம் டாஸ்மாக் கடை அருகில் சிலர் சந்து கடை நடத்தி வருகின்றனர். தினமும் மதுபிரியர்கள் மது குடித்து விட்டு பெண்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். போலீசில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. புகார் செய்த எங்கள் வீட்டுக்கு சந்துக்கடை வியாபாரிகள் பில்லி, சூனியம் செய்வினை செய்து வீட்டின் முன்பு திருநீறு தூவி விட்டு செல்கின்றனர். இதனால் சந்துக்கடைகளை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்