மணப்பள்ளி கூட்டுறவு நீரேற்று பாசன சங்க அலுவலகத்தில்பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு

மணப்பள்ளி கூட்டுறவு நீரேற்று பாசன சங்க அலுவலகத்தில் பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-09 18:45 GMT

மோகனூர்

நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம்

மோகனூர் அடுத்த மணப்பள்ளியில், மணப்பள்ளி நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீரேற்று பாசனம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மணப்பள்ளி, கணபதிபாளையம், முத்தூர், ஆண்டிபாளையம், ராசாக்கவுண்டபுதூர், வேட்டுவம்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு காவிரி ஆற்றின் அருகே உள்ள கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயிகளுக்கு பகுதி வாரியாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர். இந்தநிலையில் சங்கத்தின் தலைவர் அப்பாவு மீது சங்க நிதியில் முறைகேடு செய்து விட்டதாக விவசாயிகள் அதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தனர். இதையடுத்து விவசாயிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் மோட்டார் அறையை தலைவர் அப்பாவு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி விட்டதாகவும், இதனால் நீரேற்று பாசனத்தில் தண்ணீர் வழங்கப்படாததால் பயிர்கள் கரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அலுவலகம் பூட்டு

இந்தநிலையில் நேற்று சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகம், மோட்டார் பம்ப் இயக்குனர்கள் மலையப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் அலுவலகத்தை திறந்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த விவசாயிகள் நீரேற்று பாசனத்திற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் எடுத்து விடாத நிலையில் எதற்காக இன்று அலுவலகம் திறக்கப்பட்டது. இங்குள்ள ஆவணங்களை எடுத்து செல்ல வந்துள்ளீர்களா? என கேட்டு 3 பேரையும் உள்ளே வைத்து சங்க அலுவலகத்தை விவசாயிகள் பூட்டிவிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், நடராஜன், சங்கர் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அலுவலகப் பூட்டை திறந்து பணியாளர்களை மீட்டனர். மேலும் இது சம்பந்தமாக இருதரப்பினரையும் மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தங்கவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அளித்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்து செயல்பட அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

மணப்பள்ளி கூட்டுறவு நீரேற்று பாசன சங்க அலுவலகத்தில் விவசாயிகள், பணியாளர்களை உள்ளே வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்