தர்மபுரி:
தர்மபுரி நகரில் தெற்கு ரெயில்வே லைன் ரோட்டில் நகராட்சி சார்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே உள்ள பழைய சாலையை முற்றிலும் அகற்றி விட்டு புதிய தார்சாலை அமைக்க வேண்டும். பழைய சாலை மீது புதிய சாலை மீண்டும் போடப்பட்டால் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வந்து விடுகிறது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, உதவி பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழைய சாலையை அகற்றி விட்டு புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.