விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை-தேர்வு போட்டியில் 125 பேர் பங்கேற்பு

Update: 2023-05-25 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தர்மபுரி பிரிவு சார்பில் 2023-2024-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த தேர்வு போட்டிகளை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். தடகளம், கூடைப்பந்து, ஆக்கி, கைப்பந்து, கிரிக்கெட், ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை நீச்சல், கபடி, கால்பந்து ஆகிய தேர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் 101 மாணவர்கள், 24 மாணவிகள் என மொத்தம் 125 பேர் கலந்து கொண்டனர். இந்த தேர்வு போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்பதற்கு கடிதம் வழங்கப்பட்டது. மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். இந்த விளையாட்டு விடுதிகளில் சத்தான உணவு, விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சீருடை ஆகியவை தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்