மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி-மாநில அளவில் 9-வது இடத்திற்கு முன்னேற்றம்

Update: 2023-05-08 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 96.94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனால் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

96.94 சதவீத தேர்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை 198 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 852 மாணவர்களும், 9 ஆயிரத்து 375 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் எழுதினார்கள். இதில் 8 ஆயிரத்து 509 மாணவர்களும் 9 ஆயிரத்து 160 மாணவிகளும், திருநங்கை ஒருவரும் என மொத்தம் 17 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.13 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சிவிகிதம் 97.71 சதவீதம் ஆகும்.

மாவட்டத்தில் மொத்தமாக 96.94 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். சென்ற ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.7 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டைவிட கூடுதலாக 2.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 89 அரசு பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 554 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 9 ஆயிரத்து 79 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டைவிட கூடுதலாக 4.33சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிட நல பள்ளியினை சேர்ந்த மொத்தம் 92 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 86 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.48 சதவீதம் ஆகும். 4 பழங்குடியினர் நல பள்ளிகளை சேர்ந்த 255 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 244 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.69 சதவீதம் ஆகும்.

9-வது இடத்திற்கு முன்னேற்றம்

இந்த ஆண்டு 17 அரசு பள்ளிகள் உள்பட 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் நாமக்கல் மாவட்டம் கடந்த ஆண்டு 16-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 7 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்து உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. அதில் பாடவாரியாக அவர்களது மதிப்பெண் இடம் பெற்றிருந்தது. சில மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று, தேர்வு முடிவுகளை தங்களதுநண்பர்களுடன் பார்த்துமகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்