தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 92 மாணவர்கள் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் வெற்றி-தமிழக அளவில் முதலிடம் பிடித்தனர்

Update: 2022-12-03 18:45 GMT

தர்மபுரி:

தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 92 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்தனர்.

இலக்கிய திறனறி தேர்வு

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டத்தில் 1,550 மாணவர்கள், 3,214 மாணவிகள் என மொத்தம் 4,764 பேர் எழுதினர்.

தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவர்கள், 77 மாணவிகள் என மொத்தம் 92 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தர்மபுரி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

பாராட்டு

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ.36 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.33 லட்சத்து 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்