8-ம் வகுப்பு தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-முதன்மை கல்வி அலுவலர் தகவல்

Update: 2022-09-05 16:07 GMT

கிருஷ்ணகிரி:

8-ம் வகுப்பு தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

8-ம் வகுப்பு தேர்வு

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 8-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (நோடல் சென்டர்) நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணமாக ரூ.125, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வருகிற 12-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் தட்கல் விண்ணப்ப கட்டண தொகை ரூ.500-ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

சான்றிதழ் நகல்

இதில், முதன் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள், ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்று சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பாடத்தை எழுத விண்ணப்பிப்பவர்கள், ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றதழின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

அத்துடன் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த தேர்வு குறித்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு அதில் அவர்கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்