எடைக்கற்களை முத்திரையிட வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

எடைக்கற்களை முத்திரையிட வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-07-29 18:48 GMT

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்

கரூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் எடைக் கற்களை வைத்து தராசுகளை பயன்படுத்தி வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மோகன் தனது எடைகற்களை முத்திரையிட வேண்டும் என கரூர் எடை கற்கள் முத்திரை ஆய்வாளராக பணியாற்றிய விஜயன் (வயது 61) என்பவரை அணுகினார். இதற்கு விஜயன் எடைக்கற்களை முத்திரையிட ரூ.1000 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத மோகன், இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.1000-த்தை விஜயனிடம் லஞ்ச பணமாக மோகன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் விஜயனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இது ெதாடர்பான வழக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இதற்கான தீர்ப்பை நேற்று நீதிபதி ராஜலிங்கம் வழங்கினார். இதில், விஜயன் லஞ்சம் வாங்கியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அரசு பணியை தவறாக பயன்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனையும், இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். ஏக காலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் விஜயன் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார்.

Tags:    

மேலும் செய்திகள்