புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் முன்னாள் காதலன்
புகைப்படங்களை அனுப்பி மிரட்டும் முன்னாள் காதலன்
குனியமுத்தூர்
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். எம்.பி.ஏ. பட்டதாரி. தற்போது பெங்களூருவில் பணிபுரிகிறார். இவர் கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த மதுரையை சேர்ந்த பூவரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டோம்.
இந்த நிலையில் எனக்கு பெங்களூருவில் வேலை கிடைத்தது. இதற்கிடையில் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து சென்றோம். ஆனால் அந்த நபர், காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை எனது நண்பர்கள், உறவினர்களுக்கு செல்போன் மூலம் அனுப்பி மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.