உதவித்தொகை பெற முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளையாட்டு துறையில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்தநிலையில் உள்ள சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான குறைந்தபட்ச தகுதிகள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், 2 மற்றும் 3-வது இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு தகுதியான விளையாட்டு போட்டிகள் ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளாகும்.
மாத வருமானம்
கடந்த ஜனவரி 31-ந் தேதி அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதி இல்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பங்களை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு 72990 05768 என்ற மாவட்ட விளையாட்டு அலுவலக செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.