கே.ஈச்சம்பாடி தடுப்பணையின் வலது புற கால்வாய் புதர்களால் ஆக்கிரமிப்பு-தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மொரப்பூர்:
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி தடுப்பணையின் வலதுபுற கால்வாயில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
வலது புற கால்வாய்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களின் வழியாக தென்பெண்ணை ஆறு பாய்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் கே.ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் வலது புற கால்வாய் பெரமாண்டப்பட்டி, அம்மாபேட்டை, சாமண்டஅள்ளி, பொன்னாப்புதூர், கவுண்டம்பட்டி, தொட்டம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக எம்.வெலாம்பட்டி பகுதி அருகே மீண்டும் தென்பெண்ணை ஆற்றுடன் இணைகிறது.
இந்த வலதுபுற கால்வாய் வழியாக மழைக்காலங்களில் உபரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் உபரி நீர் கால்வாயில் கடைமடை பகுதியான எம்.வெலாம்பட்டி வரை செல்லும்போது சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் இந்த வலது புற கால்வாயில் தண்ணீர் ஓடும் போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
ஆக்கிரமித்த புதர்கள்
இந்த நிலையில் வலதுபுற கால்வாயில் அண்மையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கால்வாயில் பல்வேறு இடங்களில் புதர்கள், செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் சீராக ஓடாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இந்த கால்வாயில் இறுதியாக தண்ணீர் சென்றடையும் எம்.வெலாம்பட்டி பகுதிக்கு போதுமான அளவில் தண்ணீர் சென்று சேரவில்லை. இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாய சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு தீர்வு காண வலதுபுற கால்வாயில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும். அதன் மூலம் கால்வாயில் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூர்வார வேண்டும்
பெரமாண்டபட்டியை சேர்ந்த ஜெகநாதன்:-
தென்பெண்ணை ஆற்றின் வலதுபுற கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் ஓடும் பகுதியில் பல இடங்களில் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இந்த கால்வாயில் தண்ணீர் சீராக ஓட முடியாமல் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கிறது. இந்த கால்வாயின் கடைமடை பகுதிக்கு போதுமான அளவில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கால்வாயில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும். கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
நீர்க்கசிவு
சாமண்டஅள்ளியை சேர்ந்த ஆசைத்தம்பி:-
தென்பெண்ணை ஆற்றில் இப்போது நீர்வரத்து கணிசமாக உள்ளது. கே.ஈச்சம்பட்டி தடுப்பணையில் இருந்து வலதுபுற கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் கால்வாயை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள புதர்களால் தண்ணீர் சீராக ஓட முடியவில்லை. இந்த கால்வாயில் சில இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
எனவே கால்வாயில் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். கால்வாயில் சேதம் அடைந்த பகுதிகளை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கடைமடை பகுதிக்கு தேவையான அளவில் தண்ணீர் சீராக சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.