பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் -ராமதாஸ்

பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-05-03 19:09 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில், குறிப்பாக பென்னாகரம் தொகுதியில் வனத்தையொட்டிய பகுதிகளில் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் பிழைத்து வரும் மக்களை அங்கிருந்து அகற்றும் பணிகளில் வனத்துறை ஈடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வனத்தை மட்டுமே நம்பி வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்களில் வனத்துறை யினர் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

வனப்பகுதிகளில் வாழ்வாதாரம் ஈட்டும் மக்களை அங்கிருந்து அகற்ற வனத்துறை முடிவு செய்திருக்கிறது. அதற்காக காவல்துறையினருடன் இணைந்து சிறப்பு வேட்டை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாத வாழ்வாதார பறிப்பு ஆகும். வனத்துறையினரின் இத்தகைய அத்துமீறலை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவே கூடாது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு கடந்த காலங்களில் எந்த நெருக்கடியும் ஏற்பட்டதில்லை. தருமபுரி மாவட்டத்தின் புதிய வனத்துறை அதிகாரி பொறுப்பேற்ற பிறகு தான் அத்துமீறல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்ட வனத்துறை அதிகாரியின் அத்துமீறலை அரசு அனுமதிக்கக்கூடாது.

எனவே பென்னாகரம் தொகுதியில் வனப்பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும். வனப்பகுதிகளில் வாழும் மக்களிடம் எந்த வகையிலும் அத்துமீறக்கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்