தமிழ்மொழியை வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்

தமிழ்மொழியை வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

Update: 2023-02-19 10:45 GMT

வாணியம்பாடி

தமிழ்மொழியை வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

முத்தமிழ் மன்ற விழா

வாணியம்பாடியில் முத்தமிழ் மன்ற விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராட்டரங்கம் நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், முத்தமிழ் மன்ற செயலாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நூல்களை வெளியிட்டும், விருதுகளை வழங்கியும், மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

நாம் ஒவ்வொருவரும் தமிழை ஏன் கற்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என்றால் தன் சொந்த தாய்மொழியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நாம் முன்னேற முடியும். அதன் மூலம் சிறந்த சிந்தனைகளை உருவாக்கி தங்களின் தாய்மொழி மூலம் வளர்ந்து ஆளாக முடியும்.

பாடுபட வேண்டும்

எல்.கே.ஜி. முதல் தமிழில் முழுமையாக கற்றுத்தர வேண்டும். பிற மொழியான ஆங்கில மொழியை கற்றுக் கொண்டாலும் அது கூடுதல் மொழியாக தான் இருக்க வேண்டும்.

இதுபோன்று நாம் எல்லா இடங்களிலும் எக்காரணத்தை கொண்டும் தமிழை விடாமல் படித்து வந்தால் ஒரு காலத்திலும் தமிழை அழிக்க முடியாது. தமிழ் ெமாழியை வளர்க்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

நான் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிய போது இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு பணிகளை செய்து வந்தேன்,

தற்போதுள்ள காலகட்டத்தில் நில அதிர்வை கூட காகமும், நாய்களும் குறைப்பதால் மட்டுமே நமக்குத் தெரியும் நிலை உள்ளது. நாம் கல்வி கற்று நம்முடைய சிந்தனைகளை வளர்த்தால் ஒவ்வொரு மனிதனும் உயர்ந்த நிலையை அடையலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து யானை தந்தம் என்ற தலைப்பில் கவிதை படித்தார்.

நிகழ்ச்சியில் டாக்டர். விசாகப்பெருமாள் எழுதிய கவிராட்டினம் என்ற கவிதையின் நூலையும், கோட்டீஸ்வரன் எழுதிய கவிச்சாலை என்ற கவிதை நூலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து புத்தக மதிப்புரையை சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜகோபாலன், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ், குன்றத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முனைவர் அந்தோணி டேவிட் நாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சொல்லரங்கம்

முன்னதாக நடைபெற்ற சூழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்