கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்; முதல்-அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை

தமிழக கவர்னருக்கு எதிராக அனைவரும் இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-01-07 23:10 GMT

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்-அமைச்சரிடம் மனுக்கள் அளித்தார்.

அதைத்தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

சர்க்கரை ஆலை

பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னையில் வருகிற 18-ந் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

இதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம்.

குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

கவர்னருக்கு எதிராக...

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். கவர்னராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

கவர்னரின் இந்த போக்கு குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கவர்னருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

அண்ணாமலை

அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது கிரிமினல் வழக்கு தொடர்பானது.

அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ம் தர அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்