இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும் : முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு

பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-24 07:03 GMT

சென்னை,

தாம்பரத்தை அடுத்த வண்டலுாரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

வனத்துறை மூலம் தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகிறது. அதேபோல் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 33 சதவீதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 ஆண்டுகளில் அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த ஆண்டு 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்றாங்கால்களின் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.வண்டலுார் உயிரியல் பூங்கா அருகேயுள்ள வனத்துறை இடத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.பின்னர் பேசிய முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது ;

இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது, ஆனால் இயற்கையை நம்மால் காக்க முடியும். வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம். ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும். தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும்

இயற்கையை காக்க அனைவரும் முன்வர வேண்டும். இயற்கையை காப்பாற்ற பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. . அனைத்து கோயில்களிலும் சிறப்பு மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையை காப்பது என்பது நமது பிறப்பிலேயே உள்ளது. அரசும் ஆட்சியும் மட்டுமே இயற்கையை காக்க முடியாது; மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். இயற்கையை அரசும், மக்களும் காக்க வேண்டும்.

காலநிலை மாற்றம் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இயற்கையை காத்தல் என்பது மக்களை காப்பது போல் உள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். . காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நாட்டு மரங்களை நடுவது அவசியம். பசுமை தமிழகம் இயக்கத்தை வெற்றி பெற செய்வது மக்கள் கையில் தான் உள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்