மாதந்தோறும் நகரசபை கூட்டம் நடத்த வேண்டும்

சீர்காழியில் மாதந்தோறும் நகர சபை கூட்டம் நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-20 19:00 GMT

சீர்காழி;

சீர்காழியில் மாதந்தோறும் நகர சபை கூட்டம் நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாதந்தோறும்

சீர்காழி நகர சபை கூட்டம் தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடந்தது. ஆணையர் வாசுதேவன், துணைத்தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை இள நிலை உதவியாளர் ராஜகணேஷ் படித்தார். தொடர்ந்து 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் உறுப்பினர்களிடையே நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-ரமாமணி (அ.தி.மு.க.) :- நகர சபை கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் நடத்த வேண்டும். 2 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடத்தக்கூடாது. மேலும் ஒரே கூட்டத்தில் 31 தீர்மானங்களை வைக்கக் கூடாது. வளர்ச்சிப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எரிவாயு தகன மேடையில் இதுவரையில் எத்தனை உடல்கள் எரியூட்டப்பட்டுள்ளது. அதற்கான நிதி எந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புளிச்சக்காடு மெயின் ரோட்டில் தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் .

பெயர் பலகை

வள்ளி (தி.மு.க.) :- மேட்டு தெருவிற்கு சாலை அமைத்து தர வேண்டும்.

ராஜசேகரன்(தே.மு.தி.க.):- சீர்காழி நகராட்சி சார்பில் 24 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த பெயர் பலகையை ஒப்பந்தக்காரர்கள் கண்டிப்பாக வைக்க வேண்டும். நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டில் பொது முழு சுகாதார வளாகம் உள்ளது. இதற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். மேலும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

தெரு விளக்கு

முழுமதி (ம.தி.மு.க):- எனது வார்டில் கூடுதலாக குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.துணைத் தலைவர் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி பகுதியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தால் உரிய மரியாதை வழங்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நிதிநிலைக்கேற்ப...

தலைவர்:- வரும் காலங்களில் மாதந்தோறும் சாதாரண கூட்டம் மற்றும் சிறப்பு கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சி பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீர்காழி நகர் பகுதியில் 20 வார்டுகளிலும் முதல் கட்டமாக 64 தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநிலைக்கேற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.தற்பொழுது தார்ச்சாலை அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வரும் காலங்களில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட உள்ளது. மழை நீர் வடிகால் அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் பொறியாளர் சித்ரா, மேலாளர் காதர்கான், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்