பா.ஜ.க கதவையே கழட்டி வைத்தாலும் கூட்டணிக்கு ஆள் இல்லை: கி.வீரமணி தாக்கு

சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதற்கு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-10 09:33 GMT

தஞ்சை,

தஞ்சையில் பெரியார் மணியம்மை பல்கலைகழகம் அமைந்துள்ளது. இங்கு பெரியார் மற்றும் மணியம்மை சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மணியம்மையாரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வீரமணி கூறியதாவது; "தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் போகப் போக தெரியும். ஏற்கனவே ஒரு வழக்கு வந்த போது தேர்தல் ஆணையர்களை அவர்கள் விரும்புகிற போது அவர்கள் விரும்புகிற அளவிற்கு 7 முதல் 8 தடவை பதவி நீட்டிப்பு கொடுத்ததை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை. மாறாக தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியல் சட்டப்படி குறிப்பிட்ட காலம் அவர்கள் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும். எனவே இந்த நியமனங்கள் சரியில்லை. புதிய நியமனம் வேண்டும் என்று சொன்னதை, அரசு ஏற்கவில்லை. அவர்கள் கருதியபடி தேர்தல் பத்திரத்தில் எப்படி மோடி அரசு செய்ததோ, அதேபோல் இதையும் தன் வசம் செய்து இருக்கிறார்கள். அது ஒரு மர்ம கதையாக இருக்கிறது." என்றார்.

மேலும், "சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைத்திருப்பதற்கு தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு முடிவு. தேர்தல் கூட்டணி குறித்து பாஜக கதவு திறந்து இருக்கிறது, வாருங்கள் எனக் கூறினார்கள். கதவு திறந்தாலும், ஜன்னல் திறந்தாலும், கதவையே கழட்டி வைத்தாலும் கட்டிடத்தையே திறந்து வைத்தாலும் அவர்களை சீண்டுவதற்கு ஆட்கள் கிடையாது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்