பொதுசிவில் சட்டத்தை பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி
பொது சிவில் சட்டத்தை பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை என மதுரையில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
பொது சிவில் சட்டத்தை பா.ஜனதா கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை என மதுரையில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
பொதுசிவில் சட்டம்
மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது சிவில் சட்டத்தை, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை. மணிப்பூரிலும் இந்த சட்டத்தை ஏற்கவில்லை. ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவரை முஸ்லிம்கள் மட்டும் தான் தனி சட்ட வாரியம் அமைத்துள்ளனர். ஆனால் தற்போது சீக்கிய மதத்தினர் தனி சட்ட வாரியம் அமைத்திருக்கிறார்கள். பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் மட்டும் எதிர்க்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் உள்ள கட்சியினரும் எதிர்க்கின்றனர். தமிழகத்தில், பொது சிவில் சட்டத்தை தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்கின்றது. எனவே அந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாது.
மோடியின் கனவு
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி விட்டோம், 370 பிரிவை நீக்கி விட்டோம், அதேபோல், பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து, 2024 தேர்தலிலே வெற்றி பெறுவோம் என மோடி நினைக்கிறார். அவருடைய கனவு பகல் கனவாகும். மோடி அரசின் இந்த பன்முக தன்மை, பண்பாட்டை சிதைக்க கூடிய நடவடிக்கைக்கு எதிராக மக்கள் செயல்படுவார்கள். கர்நாடகாவில் ஆட்சியை இழந்ததுபோல், இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆட்சியை இழக்கும். பொது சிவில் சட்டம் பற்றி முஸ்லிம் சமூக மக்கள் கவலைப்பட தேவையில்லை.
கவர்னரின் கடமை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல சந்தர்ப்பங்களில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு அந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு வந்த பின் அவர் அதை மாற்றி அமைத்து இருக்கிறார். ஒரு அமைச்சருக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்துவது மட்டும் தான் கவர்னரின் கடமை. முதல்-அமைச்சர் யாரை நியமிக்கிறாரோ, பரிந்துரை செய்கிறாரோ அவருக்கு பதவியேற்பு செய்து வைப்பது தான் அவர் வேலை. சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாக ஒரு அமைச்சரை நீக்கம் செய்ய உரிமை இல்லை. எனவே, அவரை தமிழகத்தில் தொடர விடாமல் மத்திய அரசு திரும்பப்பெறும் வரை தொடர்ச்சியாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டம் நடத்த வேண்டும். பாட்னாவில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த அந்த நிகழ்வு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் சமது, மாநில துணை பொது செயலாளர் மைதீன் ஷேர்கான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகமது கவுஸ், துணை மேயர் நாகராஜன், மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம், வடக்கு மாவட்ட தலைவர் சீனிமுகமது, உள்ளிட்ட பலர் இருந்தனர்.