அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவில் இருப்பு உள்ளது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-12 18:45 GMT

எலச்சிபாளையம்

ஆய்வு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை, மேட்டுபுதூர் அங்கன்வாடி மையம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை மையம், மருந்து கிடங்கு ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

அப்போது பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காலமுறை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம், பச்சிளம் குழந்தைகளுக்காக மருத்துவமனையில் உள்ள சிறப்பு உபகரணங்கள், மழைக்காலங்களில் தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் உள்ளனவா என்று மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்து, பதிவேடுகளை பார்வையிட்டு இருப்பு எண்ணிக்கையை சரிபார்த்தார். மேலும் அத்தியாவசிய மருந்து பொருட்களான காய்ச்சல் மாத்திரைகள், இருமல் மருந்துகள், பாம்புகடி விஷமுறிவு மருந்து உள்ளிட்ட மருந்துகள், கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கை மற்றும் தற்போதைய இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

தேவையான மருந்துகள்

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அனைத்தும் முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்தப்படுகிறதா என்றும், தற்போது பருவமழை காலத்தில் அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்றைய தினம் அரசு மருத்துவமனைகளில் மழைக் காலங்களில் அவசர தேவை மருந்துகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்றும், பாம்புகடிக்கு மருந்துகள் போதுமான அளவு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவமனையில் தாய்ப்பால் சேமிப்பு வங்கியில் தாய்ப்பால் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. பிற மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்பட்டால் இங்கிருந்து பெற்றுக்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தயார் நிலையில்

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்தொற்றுகளுக்கு மருந்துகள் போதுமான அளவில் தயார் நிலையில் உள்ளது. மேலும் சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம், ஊட்டச்சத்து குறித்து அளவீடு செய்து குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட கலெக்டர் மாதந்தோறும் குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் தேவையான அளவு மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளது. மேலும், வெள்ள நீரினால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் உடனடியாக பணிகள் மேற்கொள்ள தேவையான கருவிகள், பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்