இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடையும்

Update: 2022-06-15 14:08 GMT

அனுப்பர்பாளையம்,

திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் நடந்து வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடையும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகவாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே தொழிலாளர்களின் நலன் கருதி திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

இதையடுத்து மத்திய அரசின் சார்பில் ரூ.74 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பூர் திருமுருகன்பூண்டி-பூலுவப்பட்டி ரிங் ரோட்டில் 7.46 ஏக்கரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அடுத்த மே மாதம் முடிவடையும்

பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் கணேசன் உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் அதிக தொழிலாளர்கள் உள்ள மாவட்டமாக திருப்பூர் உள்ளது. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறோம். நீதிமன்ற வழக்கு காரணமாக நீண்ட காலமாக தொடங்கப்படாமல் இருந்த இந்த கட்டுமான பணிகள், முதல்-அமைச்சரின் துரித நடவடிக்கையால் தொடங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் கட்டுமான பணிகள் நிறைவடையும்.

இந்த மருத்துவமனையின் மூலமாக 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். அனைத்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவமனையாக அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின்போது கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்க்கொடி, இ.எஸ்.ஐ. மண்டல இயக்குனர் ரகுராமன், திருப்பூர் கிளை மேலாளர் திலீப், 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தி.மு.க. பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாசலம், 1-வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, மின் வாரிய தொ.மு.ச. செயலாளர் ஈ.பி.சரவணன், தி.மு.க. நிர்வாகி சிவபாலன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்