சிறை வாசலில் தப்பி ஓடிய கைதி
நாகர்கோவிலில் சிறை வாசலில் இருந்து தப்பி ஓடிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணி நேரத்தில் மீண்டும் கைதியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சிறை வாசலில் இருந்து தப்பி ஓடிய கைதியால் பரபரப்பு ஏற்பட்டது. 3 மணி நேரத்தில் மீண்டும் கைதியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
கைதி தப்பி ஓட்டம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் மருதன்கிணறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் தற்போது சங்கரன்கோவில் நல்லரசன் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார். குமரி மாவட்டம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் வல்லரசு மீது ஒரு திருட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை அவரை ஈத்தாமொழி போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.
இரவு 9.45 மணிக்கு சிறைவாசலில் சென்ற போது திடீரென வல்லரசு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
உடனே அவரை பிடிக்க பின்தொடர்ந்து போலீசார் துரத்தினர். இரவு நேரம் என்பதால் குடியிருப்பு பகுதி வழியாக ஓடி மறைந்து விட்டார்.
சுற்றி வளைத்து பிடித்தனர்
இதனையடுத்து நாகர்கோவில் மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தப்பி ஓடிய கைதியை பிடிக்க சல்லடை போட்டு தேடினர். நள்ளிரவிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.
இந்தநிலையில் நள்ளிரவு 12.45 மணிக்கு வல்லரசு வடசேரி பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். கொஞ்சம் தாமதமானால் அவர் பஸ் ஏறி தப்பி சென்றிருக்கலாம். ஆனால் அதற்குள் போலீசார் கைதியை மடக்கி பிடித்தனர். கைதி தப்பி ஓடிய 3 மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்.
பின்னர் நேசமணிநகர் போலீசார் தப்பிச் செல்ல முயன்றதாக வல்லரசு மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துறை ரீதியான நடவடிக்கை
மேலும் வல்லரசு தப்பி சென்றபோது காவலில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசாரிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் விசாரணை நடத்தினார். இதனால் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.