மனவளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து வாலிபர் தப்பி ஓட்டம்
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள குண்டல்பட்டியில் மனவளர்ச்சி குன்றிய 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இல்லம் மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மனநலம் குன்றிய ஆண்கள் பராமரிக்கப்படுவதுடன் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த 2020-ம் ஆண்டு காரிமங்கலம் பகுதியில் சுற்றி திரிந்த மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிவா (வயது 28) என்ற வாலிபர் மீட்கப்பட்டு, இந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இல்லத்தில் இருந்து திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இல்ல நிர்வாகிகள் சிவாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால்அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இல்ல திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி இதுபற்றி மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய சிவாவை கண்டுபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாபானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இல்லத்திலிருந்து மாயமான வாலிபர் எங்கே சென்றார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.