ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட் மீண்டும் ஆர்.கே.வி. ரோட்டில் செயல்படுமா? வியாபாரிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட் மீண்டும் ஆர்.கே.வி. ரோட்டில் செயல்படுமா? என வியாபாரிகள், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2022-11-20 00:00 GMT

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட் மீண்டும் ஆர்.கே.வி. ரோட்டில் செயல்படுமா? என வியாபாரிகள், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பரவல்

ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இங்கு பழக்கடை, காய்கறி கடை என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வந்தன. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மட்டும் இன்றி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்வார்கள். இதனால் இங்கு தினந்தோறும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டது. இதன் காரணமாக சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. காய்கறி கடைகள் நெருக்கமாக செயல்பட்டதால் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க முடியாது என்பதால் காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட்

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரித்து பலர் உயிர் இழந்தனர். இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு, வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் ஈரோடு பஸ் நிலையத்தில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்.கே.வி. ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டது. இங்கு பொதுமக்கள் காய்கறிகள் வாங்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விளையாட்டு வீரர்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் குறைய தொடங்கியதும் தமிழக அரசு மீண்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. இதனால் நேதாஜி காய்கறி மார்க்கெட்டை மீண்டும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் காய்கறிகள் கடைகள் அமைக்கப்பட்டன. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அரசியல் கட்சி கூட்டங்கள், புத்தகத்திருவிழா, சர்க்கஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. மேலும் இந்த மைதானத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தால் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி விடுமுறை நாட்களில் மாணவ -மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இங்கு வந்து மகிழ்ச்சியுடன் விளையாடி செல்வார்கள். ஆனால் இப்போது காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருவதால் மாணவ -மாணவிகள் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள்.

மாற்ற வேண்டும்

மாநகர் பகுதியில் இலவசமாக விளையாட மைதானம் கிடையாது என்பதால் வசதி படைத்த ஒருசிலர் பணம் கட்டி விளையாடி வருகிறார்கள். ஆனால் ஏழை எளிய மாணவ -மாணவிகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் வ.உ.சி. மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொள்வார்கள்.

ஆனால் தற்போது அதுவும் முடியாத நிலையில் உள்ளது. எனவே ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டை மீண்டும் ஆர்.கே.வி. ரோட்டுக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாபாரம் இல்லை

வியாபாரி மணிகண்டன்:-

ஈரோடு ஆர்.கே.வி. ரோடு பகுதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள், மளிகை கடைகள், நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு வருபவர்களும் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகள் வாங்கி செல்வார்கள்.

ஆனால் வ.உ.சி. மைதானத்தில் காய்கறி மார்க்கெட் செயல்படுவதால் காய்கறிகள் தேவைப்படுபவர்கள் மட்டுமே இங்கு வருகிறார்கள். இதனால் சில்லரை வியாபாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரம் இல்லாததால் ஒரு சில வியாபாரிகள் கடைகளை காலி செய்து விட்டனர். எனவே மீண்டும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டை ஆர்.கே.வி. ரோடு பகுதிக்கு மாற்ற வேண்டும். மேலும் நேதாஜி ரோட்டில் 200 கடைகள் மட்டுமே கட்டப்பட்டு வருகின்றன. எனவே அங்கு கடைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளையாட முடியவில்லை

இளவரசன்:-

நான் எனது நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் இங்கு வந்து கிரிக்கெட் விளையாடி செல்வது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட முடியவில்லை. மேலும் விடுமுறை நாட்களில் நாங்கள் இங்கு வந்து விளையாடும்போது பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வந்து விளையாடுவார்கள். அவர்களுடன் விளையாடவும், அவர்களுடன் பழகவும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் அது இப்போது இல்லை. எனவே ஈரோடு வ.உ.சி. பூங்காவில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் இந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு விடாமல் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது தான் எங்களை போன்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

நடைபயிற்சி மைதானம்

கவின்:-

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காலை, மாலை என இரு வேளைகளிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அங்கு மாணவிகள் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருவதால் மாணவிகளும் காலை மாலை இரு வேளையும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நடைபயிற்சி மைதானம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் தற்போது அங்கு பணம் கட்டி செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வ.உ.சி மைதானத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றினால் அங்கு இலவசமாக நடை பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

80 சதவீத பணிகள் நிறைவு

இதுகுறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் கூறியதாவது:-

ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி தினசரி மார்க்கெட்டில் 174 காய்கறி கடைகளும், 40 பழக்கடைகளும் செயல்பட்டு வந்தன. கொரோனா பரவல் காரணமாக தற்போது வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆர்.கே.வி. ரோட்டில் புதிதாக காய்கறி கடைகள் கட்ட ரூ.29 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பணிகள் தொடங்கப்பட்டன. இங்கு தற்போது 290 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் வாகனம் நிறுத்தும் இடமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இங்கு 175-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பணிகளையும் 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் மற்றும் மழை காரணமாக பணிகள் தாமதமாக நடந்து வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

வருகிற மார்ச் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும். அதைத்தொடர்ந்து நேதாஜி காய்கறி மார்க்கெட் மீண்டும் ஆர்.கே.வி. ரோட்டில் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்