ஈரோடு கருவில்பாறைவலசு பகுதியில் ஆடு-கோழிகளை கடித்துக்கொன்ற தெரு நாய்கள் - கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு கருவில்பாறைவலசு பகுதியில் ஆடு-கோழிகளை கடித்துக்கொன்ற தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-09-30 09:24 GMT

ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி கருவில்பாறை வலசு பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். சுமைதூக்கும் தொழிலாளி. மேலும் இவர் தனது வீட்டுக்கு அருகில் பட்டி அமைத்து ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை பட்டிக்குள் புகுந்த தெரு நாய்கள் சினை ஆடு உள்பட 2 ஆடுகள் மற்றும் 10 கோழிகளை கடித்து கொன்றது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, 'இதுபோன்ற சம்பவம் இந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே எங்கள் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.' என்றனர். இதையடுத்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ், கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பிரசில்லா, உதவி இயக்குனர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் நாய்கள் தடங்கள், உயிரிழந்த கால்நடைகளை பார்வையிட்டனர். அப்போது இறந்த கோழி ஒன்றை தெருநாய் கவ்விச்சென்றதை அதிகாரிகள் நேரில் பார்த்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது, 'இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்