ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கியது
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
கூட்டுக்குடிநீர் திட்டம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டது. வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, சோதனை அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி அந்த பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டது.
இணைப்புகள்
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவடைந்து வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீர் குழாயுடன், நசியனூர் ரோடு மற்றும் மீனாட்சி சுந்தரனார் சாலையில் (பிரப்ரோடு) பதிக்கப்பட்ட குடிநீர் குழாயுடன் இணைப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் ஈ.வி.என்.ரோடு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து 2 சாலைகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியது உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை, மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கிடைத்தபிறகு தற்போது பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேட்டூர்ரோடு வழியாக வரும் குடிநீர் குழாயில் இருந்து நசியனூர் ரோட்டுக்கும், மீனாட்சி சுந்தரனார் சாலைக்கும் பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்து இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அளவீடு பணிகள் தற்போது நடந்து வருகிறது.