ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில்கடைகளின் அளவை குறைத்து ஏலம் விட நடவடிக்கை
ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் கடைகளின் அளவை குறைத்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஈரோடு கனிமார்க்கெட் வணிக வளாகத்தில் கடைகளின் அளவை குறைத்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கனிமார்க்கெட்
ஈரோடு கனிமார்க்கெட்டில் 200-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி சார்பில் ரூ.54 கோடி செலவில் 292 கடைகளுடன் 4 மாடி கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. அங்கு ஏற்கனவே கடை அமைத்து இருந்தவர்களுக்கு அருகிலேயே தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டன.
புதிய வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பொது ஏலம் விடப்பட்டது. அங்கு ஒரு கடைக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வைப்பு தொகையும், ரூ.31 ஆயிரத்து 500 வரை வாடகையும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மேலும், தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளையும் மாநகராட்சி நிர்வாகத்தினர் கடந்த வாரம் அகற்றினர்.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் ஈரோட்டுக்கு கடந்த 4-ந் தேதி வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கனிமார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் கனிமார்க்கெட் வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்குவதற்கு முன்பே, வணிக வளாகத்தில் ஏற்கனவே உள்ள கடைக்காரர்களுக்கு முன்உரிமை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பொது ஏலம் அறிவிக்கப்பட்டதோடு, முன் வைப்பு தொகையும், வாடகையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. எனவே குறைந்த வாடகையில், முன் வைப்பு தொகை இல்லாமல் கடைகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தோம்.
அமைச்சர் ஆலோசனை
அதற்கு கடைகளின் அளவை குறைத்தும், அதற்கேற்ப வாடகையை நிர்ணயம் செய்து ஏற்கனவே உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மற்ற கடைகளை ஏலத்தில் விடலாம் என்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை வழங்கினார். மேலும், எத்தனை வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கலாம் என்ற பட்டியலை அனுப்பி வைத்தால், முதல்-அமைச்சரிடம் பேசி விரைவில் தீர்வு காணலாம் என்றும் உறுதி அளித்தார்.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.