ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

Update: 2023-01-27 22:10 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடக்கிறது.

தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம்.

இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், இதுபோன்றோருக்கு வருகிற 31-ந் தேதிக்குள் இதற்கான படிவம் 12டி வழங்குவார்கள். சம்மந்தப்பட்ட வாக்காளர் வீட்டில் இல்லை எனில், 2-ம் முறை நேரில் வந்து படிவம் வழங்குவார்கள்.

தபால் வாக்கு

அந்த படிவத்தில் போதிய விபரங்களுடன் பூர்த்தி செய்து, வருகிற 31-ந்தேதி முதல், பிப்ரவரி மாதம் 4-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் வீடுகளுக்கு வந்து பெற்று கொள்வார்கள். அன்று, சம்மந்தப்பட்டவர் இல்லை என்றால், 2-ம் முறை வீட்டுக்கு வந்து படிவத்தை பெற்று கொள்வார்கள்.

மாற்றுத்திறனாளிகள், தங்களது சான்று நகலை வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளோர், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தி கொண்டவர், சுகாதார அலுவலரிடம் சான்று பெற்று வழங்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அதிகாரி, சம்மந்தப்பட்ட அனைத்து படிவங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் பூர்த்தி செய்து, 12டி படிவங்களை சரி பார்த்து தபால் வாக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வார்.

மேற்கண்ட தகவலை, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்