ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 4 பேர் மனு செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்களை பெற்றார்.
மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.
இதில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமேஷ், நாடாளும் மக்கள் கட்சியை சேர்ந்த தனலட்சுமி, சுயேச்சை வேட்பாளர்கள் கே.பத்மராஜன், நூர்முகமது ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.
மேலும் சுயேச்சை வேட்பாளா்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்கள். ஆனால் விண்ணப்ப மனுவில் பல்வேறு திருத்தங்கள் இருந்ததால் சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
தேர்தல் மன்னன்
நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரை சேர்ந்த பத்மராஜன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சேர்த்து, இதுவரை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 233-வது முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிம்சா சோசியலிஸ்டு கட்சியை சேர்ந்த ரமேஷ் (42) காந்தியைபோல வேடம் அணிந்து கையில் தராசுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.
செருப்பு மாலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு பலர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்திருந்தனர். கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகமது (வயது 63) என்பவர் செருப்புகளை மாலையாக அணிந்துகொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி (45), மகள் சத்யா (24) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்கள்.
தூண்டில்
மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன் (38) என்பவர் கையில் தூண்டிலுடன் மனுதாக்கல் செய்ய வந்தார். அப்போது அவரது கையில் இருந்த பதாகையில், "ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். ஊழல், லஞ்சத்தை ஒழிப்போம். நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிப்போம். வாக்களிப்பது ஜனநாயக கடமை", உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.