ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிஇடைத்தேர்தலையொட்டி 11 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 11 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Update: 2023-01-27 21:50 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி 11 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

11 வாக்குச்சாவடிகள் இடமாற்றம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையம் அமைவிட மாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடக்கிறது.

இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. அவற்றில் 11 வாக்குச்சாவடி மையங்கள் மாறுதல் செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக அருகில் உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி, வீரப்பன்சத்திரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.

மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடம்

மேலும் வீரப்பன்சத்திரம் விநாயகா வித்யா பவன் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி, வீரப்பன்சத்திரத்தில் உள்ள மாநகராட்சி பழைய 1-ம் மண்டலம் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கருங்கல்பாளையம் டிவைன் மழலையர் மற்றும் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம், கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாநகராட்சி காமராஜர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி, ராஜாஜிபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வாசுகிவீதி தமயந்தி பாபுசேட் நகராட்சி திருமண மண்டபத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகள், பிரப் ரோடு செங்குந்தர் ஆரம்ப பள்ளிக்கூடத்திற்கும் ஒரு வாக்குச்சாவடி பிரப்ரோடு லலிதா கல்வி நிலையம் நடுநிலை பள்ளிக்கூடத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் செலலினம்

காந்திஜி ரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வாக்குச்சாவடி பூந்துறைரோடு செயின்ட் மேரிஸ் உயர்நிலை பள்ளிக்கூடத்திற்கும், பாலுசுப்பராயுலு வீதியில் உள்ள ரெயில்வே காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகள், ஸ்டோனி பாலம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி கட்டித்திற்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடி, பழைய ரெயில் நிலையம் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்க பள்ளிக்கூடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செலவினம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினிசந்திரா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ், குருநாதன், தேர்தல் தாசில்தார் சிவகாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்